Sunday, July 12, 2009

அறப்பாடல்கள்

அறப்பாடல்கள்......
1.பொதுவறங்கள்
உயிரினங்கள் வளமார உண்ணுமாக;
உடலுறுப்பு சொன்னபடி கேட்குமாக;
பயிரினங்கள் தழைஉரத்தால் வளருமாக'
பசுவினங்கள் இல்தோறும் பரவு மாக;
செயிரினங்கள் கல்வியினால் திருந்து மாக;
செய்தித்தாள் திரிபின்றிச் செப்பு மாக'
தயிரினங்கள் கைபட்டால் தகர்தல் போலத்;
தடைமனங்கள் திருக்குறளால் தளர்க மாதோ:
..................('உப்பங்கழி என்ற நாடக நூலிலிருந்து)

2. யாம் மதிப்பவை
தாய்காட்டும் தாய் மொழிக்கே முதன்மை வேண்டும்
தாராத அரசினையாம் மதிப்ப தில்லை;
தாய் நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும்
தடுமாறும் கட்சியை யாம் மதிப்பதில்லை;
ஓயவீட்டும் உழைப்புக்கே முதன்மை வேண்டும்
ஊழ் கூறும் சமயத்தை மதிபபதில்லை;
சேய்கூட்டும் படைப்பெருக்கே முதன்மை வேண்டும்;
செய்யாத நாட்டினை யார் மதிப்பர் அய்யா!
.....நெல்லிக்கனி என்ற நாடக நூலிலிருந்து.....

3.இயற்கைத்தொண்டு

நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை;
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை;
நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை;
நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை;
பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை;
பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை;
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்!

4.வள்ளல் அழகப்பர்
கோடி கொடுத்த கொடைஞன்;குடியிருந்த
வீடும் கொடுத்த விழுத்தெய்வம்-தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்;அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு


5.கலைப்புரட்சியாளன்--அண்ணாமலை அரசர்
நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்
நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
பெருங்கழகம் களத்து வைத்தான்;
இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
வெல்லாத செயலில்லை என்று போற்ற
விளங்கியவன் மன் அண்ணா மலையன் வாழ்க.





6.கலைப்புரட்சியாளன்--முத்தையவேள்
மணி காட்டும் கோபுரம்போல் உயர்ந்த நெஞ்சும்;
மலைகாட்டும் அகலம்போல் விரிந்த நோக்கும்
பணிகாட்டும் திருக்குறளிற்படிந்த வாழ்வும்
பதவியெலாம் படி போலக் கடந்த பாங்கும்
அணிகாட்டும் தாமரையாள் அடைந்த மார்பும்
ஆரையுமே உறவாக அணைக்கும் கையும்
பிணிகாட்டும் மருத்துவன் போல் பேணும் அன்பும்
பெற்ற தமிழ் முத்தையா வேள் பெரியோன் வாழ்க.

------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment