வ.சுப.மா.வாழ்க்கை வரலாறு...................
அண்ணாமலை எனப்பிள்ளைத் திருநாமங் கொண்ட மாணிக்கனார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைசிவபுரியில் 17-4-1917 -இல் சுப்பையா செட்டியாருக்கும் ,தெய்வானை ஆச்சிக்கும் மகவாய்த் தோன்றினார்.இளம் பருவத்திலே பெற்றோரை இழந்த இவர் தம் பாட்டனாரால் புரக்கப்பெற்றார்.பின் பர்மாவுக்குச் சென்று கடையிற் பணிபுரிந்த காலை பொய் கூறவேண்டிய கட்டாய நிலை ஏற்படவே அப்பணி துறந்து தமிழ் பயிலத் தொடங்கினார். பண்டிதமணி கதிரேசனார் முதல்யோர்தம் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பிற் பயின்று முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.சில திங்கள் அப்பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு மாணவராகவிருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப்பணியாற்றினார்.அப்பொழுதே தனிமையாகப் படித்துப் பி.ஒ.எல்., எம்.ஏ., பட்டமும் 'தமிழில் அகத்திணைக் கொள்கைகள்' பற்றி ஆய்ந்து பிஎச்.டி., பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபதாண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆகவும்,முதல்வராகவும் பணி புரிந்தார்.மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து, தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் ,தொண்டாற்றினார்.பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியேற்றுத் தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணை நின்றார்.திருவனந்தபுரத்தின் மொழிஇயற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'தொல்காப்பியத் தகைஞராகப் பணி செய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொன் விழாவில் இவர்க்கு டி.லிட்., பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.குன்றக்குடி ஆதீனம் 'முதுபெரும் புலவர்' என்னும் சிறப்புப் பட்டத்தையும், மேலைசிவபுரி சன்மார்க்க சபை 'செம்மல்' என்னும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின.அரசு இவர் மறைவுக்குப் பின் 'திருவள்ளுவர் விருது' வழங்கிச் சிறப்பித்தது.தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர் குழுவின் தலைவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்.தமிழகப் புலவர் குழுவிற்கும்,இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும்,மேலைசிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல.'காரைக்குடி தமிழ்ச் சங்கம்' நிறுவிச் சங்கவிலக்கிய வகுப்பு நடத்தியும் ,இளஞ்சிறார்க்கு "அறநூல்கள் ஒப்பித்தல் போட்டி" வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டு செய்தார்.தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.
வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் 'கொடைவிளக்கு' என்னும் கவிதை நூல் படைத்தார்.இவர் தம் தனிப்பாடல்களின் தொகுப்பு 'மாமலர்கள்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும் ,தமிழ்க்காதலும் இரு கண்களெனப் போற்றத்தக்கவை.தொல்காப்பியக்கடல் ,திருக்குறட்சுடர்,சங்கநெறி,காப்பியப்பார்வை,இலக்கியச்சாறு,தமிழ்க் கதிர்,தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள்.திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்து கொள்ள 'உரை நடையில் திருக்குறள்' என்னும் நூலை இயற்றி உள்ளார்.மணிவாசகர் பதிப்பக வெளியீடான 'கம்பர்' என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.தமிழ் யாப்பு வரலாறு ,தமிழில் வினைச் சொற்கள் ,தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும்.மன்பதையின் முன்னேற்றம் கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவியின் உரிமை,நெல்லிக்கனி,உப்பங்கழி,ஒரு நொடியில் என்பனவாம்.
இத்தலைமுறையில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர் செம்மல் மாணிக்கனார் 24.4.1989-இல் எதிர்பாரா வகையில் மறைவெய்தியது தமிழன்னையின் தவக்குறைவேயாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment